Home Article ‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

by Tamil Heritage Foundation
0 comment

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/sep/21/keezhadi-excavations-sangam-era-is-older-than-previously-thought-3239220.html

By Muthumari | Published on : 23rd September 2019 06:19 PM

‘கல் தோன்றி முன் முன் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி தமிழ்க்குடி’ என்ற பழமொழியை நிரூபித்துக்காட்டியுள்ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக ‘கீழடி நாகரிகம்’ இருக்கும் என்று கூறுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

கீழடி கிராமம்:

வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கும் பழைமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி மூன்று கட்ட ஆய்வுகள்:

இதற்காக, இந்திய தொல்லியல் துறை கடந்த 2014ம் ஆண்டு ஆய்வைத் தொடங்கியது. அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரது தலைமையில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் கிடைத்த மண்பாண்டப் பொருட்கள், கல்மணிகள் உள்ளிட்டவை உலகில் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கீழடியில் 2 முதல் 3 மீ அளவில் நிலத்திற்கடியில் கிடைத்த இந்தப் பொருட்கள் கி.மு.290 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது.

அடுத்ததாக நடைபெற்ற 3ம் கட்ட ஆய்வு முடிவில் கட்டுமானப் பணிகளுக்கானச் சான்று எதுவும் கிடைக்கவில்லை என்று ஸ்ரீதர் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன்பின்னர், கீழடி அகழாய்வை மத்திய அரசு கைவிட்டது.

கீழடி 4-ம் கட்ட ஆய்வு: 

பின்னர், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தலின் பேரில் தமிழக தொல்லியல் துறை இதனை கையில் எடுத்தது. 4ம் கட்ட அகழாய்வு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் மூன்று கட்ட அகழாய்வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால், 4ம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டுகளுக்கு பழமையானது என்று தெரிய வந்துள்ளது.

சங்க காலம்:

சங்க காலம் என்று அழைக்கப்படுவது கி.மு.3ம் நூற்றாண்டு முதல் கி.பி.2ம் நூற்றாண்டு வரை. சங்க காலத்தில் செழுமையான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்துள்ளனர். சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுதொகை உள்ளிட்ட நூல்களும் இலக்கியச் செழுமையை பறைசாற்றுகின்றன.

ஆண்பாற் புலவர்கள் மட்டுமின்றி ஒளவையார், காக்கைப்பாடினியார் உள்ளிட்ட பெண்பாற் புலவர்களும் சங்ககால வாழ்க்கை முறையை பாடல்கள் மூலமாக நமக்கு காட்டுகின்றனர். இந்நிலையில், கீழடி அகழாய்வின் மூலமாக கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.6ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று தமிழக தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலமாக சங்க காலத்திற்கும் முந்தைய ஒரு நாகரிகம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கீழடி அகழாய்வின் முக்கியத்துவம்:

கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள், காதணிகள் உள்ளிட்ட அணிகலன்கள், மணிகள், உலோகங்கள், மண்பாண்டத் தகடுகள், பல்வேறு குறியீடுகள், சதுரக்கட்டைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. சங்க காலப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு முத்துமணிகள், பெண்கள் உபயோகிக்கும் கொண்டை ஊசிகள், தந்தத்தினால் ஆன சீப்பு உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

சுமார் 1000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தகடுகள் கிடைத்துள்ளது சங்க காலத்தில் மண்பாண்டம் ஒரு தொழிலாக இருந்ததாகத் தெரிகிறது.  அதுமட்டுமின்றி மண்பாண்டத் தகடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் பிராமி எழுத்துகளின் காலமும் முன்னோக்கிச் செல்கிறது. மேலும், இந்த எழுத்துகளின் வடிவம் ஒவ்வொரு தகட்டில் வெவ்வேறாக உள்ளது.

கி.மு.6ம் நூற்றாண்டில் தமிழர்கள்:

எனவே, தமிழர்கள் கி.மு.6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கக்கூடும்; இதன் மூலம் தமிழே உலகின் மூத்த மொழி என்று உறுதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கட்டிட பொருட்களின் ஆய்வில், இரும்பு பொருட்கள், சுட்ட செங்கற்கள், களிமண், கூரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று விளையாட்டிற்கு சதுரக் கட்டைகள், 6 பக்கங்கள் கொண்ட தாயக் கட்டைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான சுடுமண்ணால் ஆன பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. விளையாட்டு மற்றும் கட்டிடக்கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளதை இது காட்டுகிறது.

அதே நேரத்தில் இங்கு சமயம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமயங்கள் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றும் இதன் மூலம் யூகிக்க முடிகிறது என்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள்.

மேலும், ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் அவைகளில் பெரும்பாலனவை ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகள் என்று தெரிய வந்துள்ளது. ஆடு, மாடுகள் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேபோன்று நூல் நூற்கும் பொருட்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நெசவுத் தொழிலும் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கீழடி நாகரிகம்:

தமிழகத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் மட்டுமே அதிகளவிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நீண்ட ஆய்வுகள் நடைபெறும் இடமும் கீழடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிந்து, கங்கை நாகரிகம் என்பது போல வருங்காலத்தில் ‘வைகை கரை நகர நாகரிகம்’ அல்லது ‘கீழடி நாகரிகம்’ என்றும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறலாம்.

கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் சங்க காலத்தில் தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? தமிழ் மொழி எவ்வளவு பழமையானது? என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றைத் திருத்தும் கீழடி அகழாய்வு:

தொடர்ந்து, 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருப்பதாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அகழாய்வு துவங்கப்பட்ட குஜராத் வாட் நகரில் சர்வதேச அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலம் சவ்னோலியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பழங்காலத் தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் நாகரிகமே மிகப் பழைமையான நாகரிகம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழி தொன்மையான மொழி என்று கூறியதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அகழாய்வு முடிவுகள் அதனை எடுத்துரைக்கின்றன.

கங்கை நகர நாகரிகம் போன்று இரண்டாம் நிலை நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் கீழடி ஆய்வுகள், தென் இந்தியாவின் வரலாற்றை, முக்கியமாக தமிழர்களின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது என்று கூறுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

You may also like

Leave a Comment