Home PhotoGallery கீழடியில் புதையுண்ட நகரம்

கீழடியில் புதையுண்ட நகரம்

by Tamil Heritage Foundation
0 comment

— முனைவர் கி.காளைராசன்

மதுரை-இராமேச்சுரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை தெப்பக்குளத்திற்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் சிலைமான் என்ற ஊர் உள்ளது.  சிலைமானுக்குத் தெற்கே 2கி.மீ. தொலைவில் கீழடி என்ற ஒரு  ​கிராமத்தின் ஒரு பகுதியாக “கீழடி பள்ளிச்சந்தை“ என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  இன்று இச்சிற்றூரானது உலக வரைபடத்தில் இடம்பெற்று வருகிறது. அங்கே பூமிக்கு அடியில் ஒரு நாகரிகமிக்க நகரமே புதையுண்டு கிடைப்பதைத் தொல்லியல்துறையினர் கண்டறிந்து ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கீழடியில் தொல்லியல்துறையின் ஆராய்ந்து வருகின்றனர் என்ற செய்தியைத் திரு.சேசாத்திரி அவர்கள் மின்தமிழிலில் பதிவு செய்திருந்தார்.  நானும் எனது குடும்பத்தினரும் சென்று பார்த்து வந்து படங்களையும் மின்தமிழிலில் பதிவு செய்திருந்தேன். இந்த ஆண்டு, கடந்த வாரம், ஐயா சிங்கநெஞ்சம் அவர்கள் கீழடியில் நடைபெற்று வரும் அகல்வாராய்ச்சி பற்றியதொரு பதிவை வழங்கியிருந்தார். மீண்டும் அகல்வாராய்ச்சி நடைபெறுவதை அறிந்து கடந்த பங்குனி 4 (17 மார்ச் 2016) வியாழக்கிழமை அன்று அங்கு சென்று பார்த்து வந்தேன்.

ஒரு பெரிய தென்னந்தோப்புக்குக் கீழே மிகப் பெரிய நகரம் ஒன்று இருந்துள்ளதைக் காண முடிந்தது.  செங்கல் சுவர்கள் , தொட்டிகள் மற்றும் உறை கிணறுகள் இருக்கின்றன. தமிழ்பிராமி எழுத்துகள் பதித்த மட்பாண்ட சில்லுகள் புதைந்து கிடக்கின்றன. இந்த அகழ்வின் போது ஏழு தங்கக் கட்டிகள் கிடைத்தன என்று தெரிவித்துள்ளனர். அனைத்திலும் ஒரே பெயர் தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்.

எங்களைப் போன்று பொது மக்களும் மாணவர்களும் அதிகமான எண்ணிக்கையில் இங்கே வந்து ஆராய்ச்சியை நேரில் பார்த்துச் செல்கின்றனர்.

உலகவரலாற்றில் தொன்மையான நாகரீகங்களின் பட்டியலில் மதுரையும் அறிவியல் அடிப்படையில் இப்போது இடம் பெறுகிறது.  ஆய்வாளர்களுக்கு நன்றிகள் பல.

 

*  படங்கள்: https://drive.google.com/drive/folders/0B02g7RFB0HureWF6S1o5S2xWRk0?usp=sharing   இந்த முகவரியில் உள்ளன.

அன்பன்

முனைவர் கி.காளைராசன்

Source:   https://groups.google.com/d/msg/mintamil/gT0Z1zWI3EE/9v6uSJwKDgAJ

Leave a Comment